மெட்டுப்போடு : பாவேந்தல் பாடல்களின் பரிணாமம்.
அப்துல் றஸாக்
பாவேந்தல் பாலமுனை பாறூக் தமிழ்க் கவிதையின் சூட்சுமங்களை நன்கறிந்தவர். மரபு, நவீனம், நவீன காவியம், குறும்பா, ஹைக்கூ, பாடல் முதலான கவிதையின் அத்தனை முகங்களையும் தரிசித்தவர்; தரிசித்துக் கொண்டிருப்பவர். இவ்வகையறாக்களை மென்மேலும் எழுதுவதினூடாக தனக்கென தனித்துவமான ஓரிடத்தைக் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வகையில் ‘பாவேந்தல் பாடல்கள்’ எனும் தொகுப்பினூடாக இன்னிசை – மெல்லிசைப் பாடல்களை கொணர்ந்து பெருமதிப்புப் பெற்ற இவரின் மற்றுமொரு தொகுப்பாக ‘மெட்டுப்போடு’ வெளிவந்திருக்கிறது.
குறித்த இசைப்பாடல் மரபு, அரபு, உருது இலக்கியங்களின் வழி வந்ததென்றும் இதனை ஓர் முஸ்லிம் மரபாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் குறிப்பிடுகிறார். மேலும் இம்மரபு புலவர் பாரம்பரியங்களிலிருந்து இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்துள்ளன என்பதும் அவர் கருத்தாகும்.
அண்மைக்காலம்வரை தமிழ் வெகுஜன சினிமாப் பாடல்கள் மீது விழுந்த புகழ்வெளிச்சம் இவ்வகை இசைப்பாடல்களை தீண்டத் தகாததாக ஆக்கிவிட்டிருந்தது என்பதே உண்மை. இதனால் இவை கீதங்களாக சுருங்கிப் போகும் நிலை ஏற்பட்டிருந்தன. பெரும்பாலும் சந்தர்ப்பத்திற்கேற்றபடி பாடலாக்கம் செய்யப்பட்டு பாடப்படும் இப்பாடல்கள், தனிநபர் அல்லது சிறுகுழுக்களின் முயற்சிகளினால் இசைவடிவம் பெற்றனவாகும். பாடல் வரிகளும், இசையும் நன்றாக இருந்தபோதிலும் வெகுஜனங்களிடம் இவற்றை கொண்டுபோய்ச் சேர்ப்பதிலுள்ள இடர்பாடுகள் இவற்றை முடக்கம் செய்துவிட்டன. தற்காலத்தில் இந்நிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
இன்று, சமூக ஊடகங்களின் பரவலாக்கம் இவ்விசைப் பாடல்களை கவனஈர்ப்புச் செய்வது புதியதொரு மீட்டுருவாக்கம் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. சிலவேளை வெகுஜன சினிமாப் பாடல்களை விடவும் பெருமதிப்பும் வாசக ஆமோதிப்பும் பெற்றனவாக இப்பாடல்கள் மாறிவிடுகின்றன. ஒரு காலத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அரிதாக ஒலி, ஒளிபரப்பான பாடல்கள் இன்று உலகளாவிய பார்வைக்குள் உடனே அகப்பட்டு விடுகின்றன. மேலும் பாடல்கள் வெளிவந்த கணத்திலிருந்தே அவை விருப்பக் குறிகளையும், விமர்சனங்களையும், பகிர்தல்களையும் பெற்றுவிடுவதும் கவனிக்கத்தக்கது. இதனால் இவ்விசைப் பாடல்களின் வெகுஜனத்தன்மை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அண்மையில் வெளிவந்து அதிகமானோரைக் கவர்ந்த பாடல்கள் வரிசையில் பொத்துவில் அஸ்மின் எழுதிய, “ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்…” எனும் பாடலும், எழுகவி ஜெலீல் எழுதிய, “ஆக்கின சோத்துக்கு கறியக் காணோம்…” எனும் பாடலும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். மட்டுமன்றி பக்கீர் பாவாப் பாடல்கள், வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய பாடல்கள், இளையோர் தன்னுணர்ச்சிப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என விரிந்து செல்லும் பல்வகைப் பாடல்கள் இன்று பிரபலம் பெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாகவே பாவேந்தல் பாறூக்கின் இசைப்பாடல்களையும் நோக்க முடியும். சமூக ஊடகமான முகநூலின் வருகையுடனேயே இவரின் இசைப்பாடல் பணியும் ஆரம்பமாகின்றது. ஈழத்தில் மெல்லிசைப்பாடல்கள் கோலோச்சிய 1970, 1980 களில் இவர் கவிதையில் தேர்ச்சி பெற்றிருந்தும் பாடல் எழுதும் முயற்சிகளில் ஆர்வம் கொள்ளவில்லை. விதிவிலக்காக சுதந்திரதின நிகழ்வொன்றினைச் சிறப்பிப்பதற்காக இவரால் எழுதப்பட்ட பாடலொன்று வானொலியில் ஒலிபரப்பட்டது.
கொரோனா முடக்க காலத்தில் தொடங்கி இன்றுவரையும் இசைப்பாடல்களை எழுதும் பாவேந்தல் பாறூக்கின் நீட்சியைப் பேசுவது முக்கியமானதாகின்றது. ‘பாவேந்தல் பாடல்களின்’ தொடர்ச்சியாக இத்தொகுப்பினைக் கொள்ளமுடிகின்றபோதும் அதிலிருந்து வேறுபடும் தனித்துவங்கள் குறித்தும் கவனம் கொள்ள வேண்டும்.
இவரது இசைப்பாடல்களில் வாய்மொழி இலக்கியக் கூறுகளின் வெளிப்பாடு சிறப்பாக இடம்பெறுகின்றன. ‘காட்டுக் குயில் வந்து கூவாதோ?’ என்று ஆரம்பிக்கும் பாடலில்,
“காட்டுக் குயில் வந்து
நாட்டா ரிசையிலே
பாட்டொன் றெனக் கெனப் பாடாதோ?”
என எழுதுகிறார். இதன் தொடர்ச்சியாக வாய்மொழிச் சொற்களையும், பண்பாடுகளையும், மெட்டுக்களையும் பயன்படுத்தி மண்ணின் மணம் கமழச் செய்கிறார். பாரதி போன்றோரும் இவ்வகையான சிந்து, கன்னி, தெம்மாங்கு, கும்மி முதலிய வாய்மொழி இசைவடிவங்களைப் பயன்படுத்தி எளிமையான இசையுணர்வுகளை ஏற்படுத்தினர். அவற்றில் வெற்றியும் கண்டனர்.
“ஆணலையும் துரத்தி வரப்
பெண்ணலையும் ஓடி
கரையினிலே முத்தமிடும்
காட்சி இங்கு பார்த்தேன்’ (வாவென்று நீ சொன்னாய்)
“தோளிலும் கா நாவிலும் கா
சுவைத்து மகிழவா” (மட்டுநகர வாவியிலே)
“பூவலில தண்ணி மொண்டு
மண்குடத்தில் வச்சிரிக்கன்
தாகம் எடுத்த தென்றால்
தயங்காம குடிச் சிருங்க” (உச்சிவெயில் அடிக்கயிலே)
“ஆத்தோர ஒழுங்கயில
அடிவச்சுப் போறவளே
பாத்தும் கதையாம நீங்க
போறதுதான் எங்க கிளி” (மாமி மகளே மரிக்கொழுந்தே)
இப்படியாக அதிகமான பாடல்களில் வாய்மொழிக் கூறுகளை பயன்படுத்தி பாவேந்தல் பாறூக் வெற்றி காண்கிறார். இவர் கையாண்டிருக்கும் ஆணலை – பெண்ணலை, தோளில் ‘கா’ நாவில் ‘கா’ பற்றிய தொடர்கள் சுவாரசியமான வாய்மொழி ஆய்வுத் தேடல்களுக்குள்ளும் எம்மை இட்டுச் செல்கின்றன. வாய்மொழிப் பாடல்களை இலகுவாக மெட்டமைத்துப் பாடுவதற்குரிய ‘கவி’ வடிமும் இவரது பாடல்களில் வெகுவாகக் கூடி வருகின்றன. பெரும்பான்மையான பாடல்களை நாமும் கூட விரும்பியபடி மெட்டமைத்துப் பாடக்கூடியதாகவுள்ளன.
சமகாலம் பல்வேறு வகைகளிலும் இவரது பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. இன்றைய இளைஞர்களின் போக்கு, உணவுக் கலாசாரம், வெளிநாட்டு வாழ்க்கை, காதல் பிரிவு, தொழில் முறைகள், வாழ்க்கைத் தத்துவம் முதலியனவற்றை கூரிய சமூக விமர்சன நோக்கோடு பாடல்கள் வழியாக அணுகுகின்றார்.
இன்றைய இளைஞர்கள் தங்களை ‘புள்ளீங்க’ என்றழைப்பதை அவர்கள் மொழியிலேயே ஞாபகம் செய்து அவர்களின் வேகத்திற்கு வேகத்தடைகளை ஏற்படுத்துகின்றார்.
“புள்ளீங்கோ நாங்களென்று
பொறுமையின்றி ஓடுகிறீர்
தொல்லைகளில் போய்மாட்டித்
துயர்ப்பட்டு வாடுகிறீர்! (பொறுமை காக்க வேண்டும்)
“கொட்டிக்கோ கொட்டிக்கோ” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் இன்றைய உணவுக் கலாசாரத்தை காரசாரமாகவே சாடுவதாகும்.
“குக் (Cook) பண்ண மறுப்பாய்
புக் (Book) பண்ணி எடுப்பாய்
பாஸ்ட் பூட் (Fast Food ) உண்டு
பசி போக்க நினைப்பாய்
கொட்டிக்கோ கொட்டிக்கோ
குப்பைகளையே கொட்டிக்கோ
தொப்பை வளரும் நோய்கள் வருத்தும்
கொட்டிக்கோ”
இவை போதனை வகையறாப் பாடல்கள் என்றாலும் சமூக நோய்களுக்கான இசை நிவாரணியாகவே ஒலிக்கின்றன.
“மலைக்குயிலே நீ வந்து கூவு…” எனும் பாடல் மலையக மக்களின் வாழ்வியல் துயரத்தைப் பாடுவதாகும். பாடல் வரிகளும் இசையும் இப்பாடலுக்கு ஓர் ஒத்திசைவாக உயிர்ப்பை தருகின்றது என்றே சொல்லலாம்.
பாவேந்தலின் இஸ்லாமிய இசைப்பாடல்கள் இத்தொகுப்பில் தனித்துத் தெரிகின்றன. பிறைகாணல், நோன்பு நோற்றல், இறையருள் பெறல் எனும் பாங்கில் இப்பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. இஸ்லாமியரின் வாழ்வியலின் புழங்கு மொழி பாடல்களுக்கு வலுச்சேர்ப்பதாகவுமுள்ளன.
இப்பாடல்களை இசைக்கோலத்துடன் சேர்ந்து கேட்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வெவ்வேறு வகையின. பெரும்பாலான பாடல்கள் கோவிலூர் செல்வராஜனினால் பாடப்பட்டுள்ளன. பாடலுக்குப் பக்கபலமான இசையை செயற்கை நுண்ணறிவு வழங்கியிருக்கிறது. சில பாடல்கள் முழுக்கவும் செயற்கை நுண்ணறிவின் துணையோடு உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இசைக்குத் துணையாகப் பாடல் எழுதப்படாமல் பாடல்களை வைத்துக்கொண்டு இசையமைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எவ்வாறெனினும் பாடல்கள் கொண்டிருக்கும் எளிமை நம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது. பாடல்களுக்கு பின்னணியாக ஆக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கூட நம்மை ஆசுவாசப்படுத்தி தரிக்கச் செய்கின்றன. ஓர் இசைப்பயணத்தினூடாக பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களோடு பயணிப்பது மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.