காணி இழந்த முஸ்லிம் மக்களுக்கு: மாற்றுக் காணிகள் வழங்க அனுமதி.!!!
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, காணிகளை இழந்த முஸ்லிம் மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க அனுமதியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ தலைமையில் அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முன்மொழிவின்படி, தீகவாபிய புனித பூமி பிரகடனத்தின் காரணமாக பொன்னன் வெளிக் காணிகளை இழந்த முஸ்லிம் விவசாயிகள் மீதான பாதிப்புகளை குறைக்கும் வகையில் மாற்றுக்காணிகளை வழங்கும் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான அனுமதி அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் அறிக்கையின் படி, 1948 ஆம் ஆண்டில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற காணிக் கச்சேரியில் 200 முஸ்லிம் விவசாயிகளுக்கு E.S. (LC-75) அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் சில காணிகளை சிங்கள நபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் காணிகளை இழந்த முஸ்லிம் மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பரிந்துரையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்பாறை மாவட்ட வனப் பாதுகாப்பு பணிப்பாளர் மற்றும் அமைச்சின் அனுமதியுடன் மாற்றுக்காணிகள் வழங்க முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்ததாவது, நீண்டகாலமாக தமக்கான காணிகளை இழந்த முஸ்லிம் விவசாயிகள் தங்களுக்கான மாற்றுக்காணிகளை பெறாத நிலையில் தங்களின் உரிமைச் சான்றிதழ்களை மட்டும் வைத்திருப்பதாகவும், மாற்றுக்காணிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.