பிராந்திய சவால்களுக்கு மத்தியில் சவுதி அரேபியா; தற்காப்பு வியூகமும் ஆன்மீகப் பலமும்.!!!
-வை.அறபாத்-
மத்திய கிழக்கின் புவிசார் அரசியலிலும் உலகளாவிய எரிசக்திப் பொருளாதாரத்திலும் சவுதி அரேபியா ஒரு தவிர்க்க முடியாத மையப்புள்ளியாகத் திகழ்கிறது.
தற்போதைய சூழலில் நேரடித்தரைப்போரில் ஈடுபடாவிட்டாலும், அந்நாடு தனது வரலாற்றில் மிகவும் சிக்கலான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
ஒரு புறம் ஈரானின் பிராந்தியக் கொள்கைகளும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளின் வான்வழி அச்சுறுத்தல்களும், மறுபுறம் எல்லை கடந்து விரிவடையும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளும் பாலஸ்தீன நெருக்கடியும் என இருமுனைச்சவால்களுக்கு நடுவே சவுதி அரேபியா பயணித்து வருகிறது.
எனினும், அனைத்தையும் கடந்து நிற்கும் அல்லாஹ்வின் பேரருளும் அவனது பாதுகாப்பும் மட்டுமே சவுதி அரேபியாவின் முதன்மையான அரணாக விளங்குவதால், இன்றைய காலகட்டத்திலும் நாட்டின் எல்லைகளுக்குள் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பாதுகாப்பும் இஸ்திரத்தன்மையும் சீராகப் பேணப்பட்டு வருகின்றன.
இத்தகைய பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது உணர்ச்சிவசப்பட்டு இராணுவ மோதல்களில் ஈடுபடாமல், மிகச்சாமர்த்தியமான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வியூகங்களைச் சவுதி அரசு முன்னெடுத்து வருகிறது.
2023ம் ஆண்டில் சீனாவின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடன் மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் பிராந்தியத்தில் நேரடி மோதல்கள் தவிர்க்கப்பட்டு, தெற்கு எல்லையில் அமைதி நிலவ வழிவகை செய்யப்பட்டது.
அதேபோன்று, இஸ்ரேலுடனான உறவை இயல்புநிலைக்கு கொண்டு வருவது குறித்த சர்வதேச விவாதங்களில், ‘இரு நாடு கொள்கை’ அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீன அரசு அமைப்பதே முதன்மை நிபந்தனை என்பதில் சவுதி அரேபியா எவ்வித விட்டுக்கொடுப்புமின்றி உறுதியாக நிற்கிறது.
மேலும், அமெரிக்காவின் பேட்ரியாட் (PAC-3) மற்றும் தாட் (THAAD) போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்துவதோடு, ‘விஷன் 2030’ (Vision 2030) திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியைத் தடையின்றித் தொடர்கிறது.
வரலாறு நெடுகிலும் சவுதி அரேபியா எதிர்கொண்ட பல்வேறு சோதனைகள், நெருக்கடிகளின் போது அனைத்து வல்லமையுள்ள அல்லாஹ்வின் முதன்மையான அருளும் அவனது பாதுகாப்பும் மட்டுமே நாட்டைக்காத்து நிற்கும் பேரரணாகத் திகழ்கின்றன.
இத்தெய்வீக அருளின் நேரடி வெளிப்பாடாகவும் இறைவழிகாட்டுதலின் விளைவாகவுமே சவுதி ஆட்சியாளர்களிடம் தீர்க்கமான விவேகமும் தளராத உறுதியும் வெளிப்படுகின்றன;
அதேவேளையில், சவுதி மக்களிடமும் இணையற்ற தேசிய ஒருமைப்பாடும் அசையாத மனவுறுதியும் மிளிர்கின்றன. இறைவனின் பேரருளும் பாதுகாப்பும் முதன்மையாக அமைவதாலேயே, அதன் நல்விளைவாக உருவெடுக்கும் ஆட்சியாளர்களின் இராஜதந்திர உத்திகளும் மக்களின் மனவுறுதியும் ஒருங்கிணைந்து, நாட்டிற்கெதிரான அனைத்து சூழ்ச்சிகளையும் பிராந்திய சவால்களையும் வெற்றிகரமாக முறியடிக்க முடிகிறது.
அதேவேளையில், சவுதி அரேபியாவிற்கெதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் எதிர்மறைப்பிம்பங்களையும், மக்களிடையே தவறான கருத்துக்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் நுட்பமான பிரசாரங்களையும் சர்வதேச சமூகமும் உலக முஸ்லிம்களும் விழிப்புடன் இனங்காண்பது அவசியமாகும்.
பிராந்தியப் போர்ச்சூழல்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களிலும் சில ஊடகத்தளங்களிலும் ஆதாரமற்ற தகவல்களும் வதந்திகளும் பரப்பப்படும் வேளையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து வெளிவரும் செய்திகளை உடனுக்குடன் நம்பி விடாமல், நடுநிலையான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மைகளை அறிவதே சாலச்சிறந்ததாகும்.
இத்தகைய உள்நோக்கம் கொண்ட சதிகளையும் ஆதாரமற்ற விமர்சனங்களையும் புறந்தள்ளி, உண்மைகளின் அடிப்படையில் சவுதியின் பாதுகாப்புக் கட்டமைப்பையும் அதன் பிராந்திய அமைதிக்கான முயற்சிகளையும் நோக்குவதே முதிர்ச்சியான அணுகுமுறையாகும்.
உலகளாவிய முஸ்லிம்களைப் பொறுத்தவரை, சவுதி அரேபியா என்பது வெறும் புவியியல் தேசம் மட்டுமல்ல.
மாறாக, அது இஸ்லாத்தின் இரு புனிதத்தலங்களான மக்கா அல்-முகர்ரமா மற்றும் மதீனா அல்-முனவ்வரா ஆகியவற்றைத்தன்னகத்தே கொண்டுள்ள அகிலத்தின் ஆன்மீகப் பூமியாகும்.
இப்புனிதத் தலங்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் ஆண்டு தோறும் வருகை தரும் கோடிக்கணக்கான புனித யாத்ரீகர்களுக்கான பராமரிப்பு வசதிகளைச் செய்வதில் சவுதி அரேபியா ஆற்றி வரும் சேவை ஈடிணையற்றதாகும்.
முதலாவதாக அமைந்த இறைவனின் பேரருள் மற்றும் அவனது பாதுகாப்பின் நிழலில், இரண்டாவதாக அதன் நல்வெளிப்பாடாகத்திகழும் ஆட்சியாளர்களின் தீர்க்கமான வழிநடத்தல், மக்களின் மனவுறுதி மற்றும் வலுவான தற்காப்பு வியூகங்கள் ஆகியவற்றின் மூலம் சவுதி அரேபியா அனைத்துச்சவால்களையும் வென்றெடுத்து, உலக முஸ்லிம்களின் ஆன்மீக மையமாகவும் பிராந்திய அமைதியின் அரணாகவும் தொடர்ந்து திகழும் என்பதில் ஐயமில்லை.