புனித மக்கா, மதீனாவின் பாதுகாப்பில் உறுதி; யேமன் மக்களின் துயர் துடைப்பதில் சவூதி அரேபியாவின் மனிதநேயப் பங்களிப்பு.!!!
-வை.அறபாத்-
இஸ்லாமியர்களின் இரு புனித தலங்களான மக்கா மற்றும் மதீனாவின் பாதுகாப்பென்பது உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் ஆன்மீக உணர்வுடனும் நம்பிக்கையுடனும் பிணைக்கப்பட்ட மிக முக்கியமான விடயமாகும்.
இத்திருத்தலங்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப்படையினரால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டு வருகின்றன.
இது சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாக மட்டுமல்லாமல், இஸ்லாமிய உம்மத்தின் புனிதஸ்தலங்களுக்கெதிராக திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலாகும்.
இத்தகைய ஆபத்தான தருணங்களில், சவூதி அரேபியா தனது பிராந்தியத்தின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதோடு, இஸ்லாமிய உலகிற்கும் அமைதிக்கும் பெரும் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
இஸ்லாமிய வரலாற்றில், இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்கா நகரின் மீது கொண்ட அன்பின் காரணமாக, “இறைவா! இந்நகரை அமைதியான நகரமாக ஆக்குவாயாக. இதன் மக்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோருக்கு கனிவகைகளையும் வழங்குவாயாக” (அல்குர்ஆன் 2:126, 14:35) எனப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
மக்கா ஹரம் ஷரீஃப்பின் புனிதத்தைப்பற்றி குறிப்பிடும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக மக்காவை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அங்கே இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்பட்டதல்ல. அங்கிருக்கும் மரங்களை வெட்டுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்).
மேலும், மக்காவில் அநீதியிழைப்பவர்களுக்குரிய கடும் வேதனை குறித்து, “அங்கு அநீதியிழைத்து, அநியாயம் செய்ய முற்படுபவனை தகுந்த வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (அல் குர்ஆன் 22:25) என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்கா நகரைத்தொடர்ந்து, நபி (ஸல்) அவர்களின் ஆன்மீக மையமான மதீனா அல்-முனவ்வரா மற்றும் அதன் பாதுகாப்பும் ஒவ்வொரு முஸ்லிமக்கும் மிக இன்றியமையாத கடமையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்காவை புனிதப்பிரதேசமாக ஆக்கியது போல், தாமும் மதீனாவை ஹரமாக ஆக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மதீனாவின் புனிதத்தைப் பேணுவது குறித்து, “மதீனாவாசிகளுக்குத் தீங்கு விளைவிக்க விரும்புபவரை, தண்ணீரில் உப்பு கரைவதைப்போன்று அல்லாஹ் கரைத்து விடுவான்” என்றும், (முஸ்லிம்).
“மதீனாவாசிகளை அச்சுறுத்துபவருக்கு அல்லாஹ் அச்சத்தை ஏற்படுத்துவான். அவருக்கு அல்லாஹ், மலக்குகள் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் உண்டாகும். மறுமை நாளில் அவரிடமிருந்து எந்தச்செயலும் ஏற்றுக்கொள்ளப்படாது. மதீனாவாசிகளை அச்சுறுத்துபவன் என்னை அச்சுறுத்தியவனாவான்” (முஸ்னத் அஹ்மத், அஸ்-ஸுனன் அல்-குப்ரா) என்றும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் மதீனா மற்றும் மக்கா போன்ற அமைதிப்பூங்காக்களைக் குறிவைத்து ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவும் போதெல்லாம், சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் அவற்றை வானிலேயே வெற்றிகரமாக இடைமறித்துத் தகர்த்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
மறுபுறம், சவூதி அரேபியா யேமனில் சட்டபூர்வமான அரசுக்குத்துணையாக நின்று கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், யேமன் நாட்டு மக்களின் துயர் துடைப்பதிலும் தனது மனிதநேயப் பணிகளை முன்னின்று வழங்கி வருகிறது.
யேமன் மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அத்தியாவசிய நிவாரணப்பொருட்களும் உணவுப் பொதிகளும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பசியாலும் ஊட்டச்சத்துக்குறைபாட்டாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவிக்கும் யேமன் குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில், மன்னர் சல்மான் மனிதநேய மற்றும் நிவாரண மையம் (KSrelief), உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து 1.55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் 35 குழந்தைகள் ஊட்டச்சத்து சிகிச்சை மையங்களுக்குத்தொடர்ந்து ஆதரவளிக்கப்படுவதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட 18,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரடியாகப் பயனடைகின்றனர். மேலும், கடுமையான ஊட்டச்சத்துக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன், சவூதி மேம்பாட்டு மற்றும் புனரமைப்புத் திட்டம் மூலம் யேமன் முழுவதும் சுகாதாரம், கல்வி, நீர் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டங்கள் திறம்பட செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
யேமன் மக்களின் இன்னல்களைப்போக்கும் வகையில், உரிய ஆவணங்களில்லாத அல்லது விசா விதிமீறல்களில் சிக்கியுள்ள யேமன் நாட்டவர்கள் தங்களது நிலையைச்சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ள ஏதுவாக, கட்டணமின்றி இலவச விசா மற்றும் தளர்வு வழங்கும் சிறப்புத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யேமனில் சட்டவிரோதமாக அதிகாரத்தைக்கைப்பற்ற முயலும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் செயல்களிலிருந்து நாட்டை மீட்க சவூதி அரேபியா தொடர்ந்தும் அரணாக விளங்கி வருவதுடன், தீவிரவாதத்திற்கெதிரான உறுதியான நடவடிக்கைகளையும் சாதாரண யேமன் மக்கள் மீதான மனிதாபிமான கரிசனைகளையும் தன் சமநிலையான இராஜதந்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறது.
இரு ஹரம்களின் புனிதத்தைப் பேணிப்பாதுகாப்பதில் சவூதி அரேபியா காட்டும் அசைக்க முடியாத உறுதியும், இன்னலுறும் யேமன் மக்களின் துயர் துடைக்க அது வழங்கும் மாபெரும் மனிதநேயக்கரங்களும், அதன் தூய எண்ணத்தின் வெளிப்பாட்டையும் இஸ்லாமிய உம்மத்தின் மீதான ஈடு இணையற்ற அர்ப்பணிப்பையும் உலகிற்குப்பறைசாற்றுகின்றன.