தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகள் 44 பொலிசாரினால் மீட்பு; காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கைது.!!!
(ஜே.கே)
பாரிய அளவிலான 44 தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்கா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார் .கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்பவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பெட்டரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என தெரிய வருகின்றது. இதன்படி சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான பெற்றரிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பெற்றரிகளும் சம்மமாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பெற்றரிகளும் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ள பெற்றரிகளும் குறித்த சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.