வளகு வாப்பா போடியின் ஊஞ்சல் சிறுகதை நூல் வெளியீடு.!!!
(எம்.ரி.எம்)
சம்மாந்துறை சித்தி றபீக்கா பாயிஸ் எழுதிய “வளகு வாப்பா போடியின் ஊஞ்சல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை கலாசார மண்டபத்தில் குயிலோசை படர்க்கைகள் இணையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வைத்தியர் எம்.எம்.நெளஷாத் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் நூல் வெளியீட்டுக்கான அனுசரணையினை சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபை வழங்கி இருந்தது.
நூலின் முதற் பிரதி சம்மாந்துறை ஈஸ்டன் நகையக உரிமையாளர் கலாநிதி பஸீர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, சிறப்புப் பிரதிகள் மக்கள் வங்கியின் பிரதி முகாமையாளர் சி.நிஷார், நிஸார் ஹார்ட்வெயார் உரிமையாளர் எஸ்.டி.அப்துல் சலாம், ஜெஸ்லான் சாரதி பயிற்சிப் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.ஜாகிர் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
30 வருடங்களாக எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகின்ற சித்தி றபீக்கா பாயிஸ் ஏலவே இரண்டு கவிதை நூல்களை வெளியீடு செய்திருப்பதோடு, மூன்றாவது தொகுதியாக சிறுகதையை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்நிகழ்விற்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை கலை கலாசார பீட சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பல்கலைக் கழக ஓய்வு நிலை பதிவாளர் மன்சூர் ஏ.காதர், ஆசிரிய வளவாளர் ஜெஸ்மி எம்.மூஸா மற்றும் இலக்கியவாதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.