இலங்கைக்குத் தேவையான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்கத் தயார் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு.!!!
இலங்கை விரும்பும் எந்தவொரு பொருத்தமான வழியிலும் நாட்டுக்கு ஆதரவளிக்கச் சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக இருப்பதாக, அதன் ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டத்தையொட்டி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பேரண்டப் பொருளாதாரச் சூழல் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டின் நிதிச் செயற்பாடுகள் வலுவடைந்துள்ளதுடன், கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்லாட்சி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட கட்டமைப்பு சார்ந்த முக்கிய துறைகளிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விடுவிப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) ஏழாவது மதிப்பாய்வு தொடர்பான ஊழியர் மட்ட உடன்பாடு இந்த மாத ஆரம்பத்தில் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மதிப்பாய்வு முழுமையாக நிறைவடைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் கிடைத்தால், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த உடன்பாடு எதிர்வரும் வாரங்களில் நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவுள்ளதாகவும், தற்போதைய திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைவதற்கு முன்னர் மற்றுமொரு மதிப்பாய்வுக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி ஏற்பாட்டிற்கு அப்பாலும், புதிய நிதி ஏற்பாடுகள், கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட கொள்கை ஆலோசனைகள் மூலம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக சொனாலி ஜெயின்-சந்திரா மேலும் தெரிவித்துள்ளார்.