தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்வு: அவசரமாகத் திறக்கப்பட்ட நான்கு வான் கதவுகள்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் தொடர் அடைமழை காரணமாக, நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான தெதுரு ஓயா நீர்த்தேக்கம் வான் பாயும் நிலையை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அதன் நான்கு வான் கதவுகளும் இன்று (15) வியாழக்கிழமை அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திற்கும், ஏனைய இரண்டு கதவுகள் தலா ஓர் அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விநாடிக்கு சுமார் 5,600 கனஅடி நீர் தெதுரு ஓயா ஆற்றுக்குத் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக, தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் குறுகிய நேரத்தில் சடுதியாக உயர்வடையக்கூடும் என்பதுடன், ஆற்றை அண்டிய கரையோரப் பகுதிகளிலும் தாழ்நிலங்களிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, தெதுரு ஓயா ஆற்றின் கீழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆற்றுப் படுகைகளைப் பயன்படுத்துவோர் மற்றும் ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.