இலங்கை – அஜர்பைஜான் உறவை வலுப்படுத்த விஜித ஹேரத் – இல்ஹாம் அலியேவ் சந்திப்பு.!!!
இலங்கைக்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஆசியாவில் தொடர்பாடல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் (CICA) 7ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அஜர்பைஜானின் பாகு நகருக்குச் சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இதன்போது, இலங்கைக்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
2026 ஒக்டோபர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெறும் CICA 7ஆவது உச்சிமாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்குகிறார்.
இந்த விஜயத்தின் போது, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட CICA உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனும் அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இப்பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கைக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பையும் மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்படவுள்ளன.



