பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளி கைது – மனைவியும் ஹெரோயினுடன் சிக்கினார்.!!!
• ரூ.63 இலட்சம் பணம், டிஜிட்டல் தராசு, பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை விமான நிலைய வீதிக்கு அருகில் கடந்த 17ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேகநபர்களிடமிருந்து 15.55 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.63 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பணம் எண்ணும் இயந்திரம், சிறிய இலத்திரனியல் தராசு, போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் போதைப்பொருள் வருமானத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 34 வயதுடைய ஆண் மற்றும் 26 வயதுடைய பெண் எனவும், இருவரும் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய கூட்டாளி என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


