பசில் ராஜபக்சவை கைது செய்ய பிடியாணை; இன்டர்போல் நீல அறிவித்தலும் பிறப்பிப்பு.!!!
மாத்தறையில் 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் ஒருவர் தங்கியிருக்கும் நாடு அல்லது அவரது முகவரி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதுடன், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைத் திரட்டுவதற்காகவே இன்டர்போல் நீல நிற அறிவித்தல் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எவ்வித அரசியல் தராதரத்தையும் கருத்திற்கொள்ளாது, குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.