டெலிகிராம் ஊடாக பண மோசடி – 38 வயது பெண் கைது: ரூ.66,999 மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிப்பு.!!!
இணையவழி பண மோசடி சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இணையவழி மோசடிக்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இணையவழி வியாபாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.542,877 வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.66,999 மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நேற்று (18) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக கடந்த 2024.02.10 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.