கலை மூலம் சமூகச் செய்தியாற்றல் – கொழும்பில் மூன்று நாள் செயலமர்வு.!!!
(ஏ.எல்.எம். சபீக்)
சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது செயல்வாதங்களின் போது கலையை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தி, சமூக மாற்றத்திற்கான தங்கள் கருத்துகளை எவ்வாறு பயனுள்ள முறையில் வெளிப்படுத்தலாம் என்பதைக் குறித்த மூன்று நாள் வதிவிட செயலமர்வு கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி அறக்கட்டளை (Eastern Social Development Foundation – ESDF) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இளம் சட்டமாணி எம்.ஆர். புஹாரி முஹம்மட் தலைமையில், ESDF நிறுவனம் ஆர்ட் லோர்ட்ஸ் (ArtLords) எனும் சர்வதேச கலை அமைப்புடன் இணைந்து இச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இச் செயலமர்வில் ஆர்ட் லோர்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச பயிற்றுவிப்பாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்வதிவிட செயலமர்வில், நாட்டின் பல பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். சமூக செயற்பாடுகளில் கலையின் பங்கு, அதன் சமூக தாக்கம் மற்றும் கலை வடிவங்களின் மூலம் சமூக செய்திகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், கலை மூலம் கதை சொல்லும் முறைகள் (Storytelling through Art), காட்சியியல் கலை, சுவர் ஓவியம், கருத்துருவாக்கம் போன்ற தலைப்புகளில் நடைமுறை பயிற்சிகளும் இடம்பெற்றன. இதற்காக ஆர்ட் லோர்ட்ஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் ஒமேக் ஷரீஃப், இயக்குநர் சபைத் தலைவர் டாக்டர் லீமா ஹலீமா ஹாலில் உள்ளிட்டோர் வளவாளர்களாக கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
செயலமர்வின் முதல் இரண்டு நாட்களில் பங்கேற்றவர்களுக்கிடையில் கலையின் சமூகப் பயன்பாடு, சமூக மாற்றத்தை உருவாக்கும் அதன் திறன் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, (12) ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நீர்கொழும்பில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் வளாகத்தில், செயலமர்வில் பங்கேற்ற அனைவரின் பங்களிப்புடன் நாட்டின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் சுவர் ஓவியம் ஒன்று வரையப்பட்டது.
இம்மூன்று நாள் வதிவிட செயலமர்வின் நிறைவில், பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர்களுக்கு “கலை மூலம் சமூக மாற்றத்திற்காக செயல்படுபவர்” எனும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





