97 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: தேசிய நடவடிக்கையில் கடற்படையின் முக்கிய சாதனை.!!!
• 21 பொதிகள் மற்றும் பயணப் பைகளுடன் டிங்கிப் படகும் கைப்பற்றல் – ‘முழு நாடுமே ஒன்றாக’ நடவடிக்கையின் கீழ் தீவிர தேடுதல்.
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
மாத்தறை, தலல்ல, நாஓட்டுன்ன கடற்கரைப் பகுதியில் 475 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினரும் இலங்கை கடலோரக் காவல்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கைப்பற்றியுள்ளனர்.
கடலோரக் காவல்படைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்தக் கூட்டு நடவடிக்கை இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நாஓட்டுன்ன கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 10 பொதிகளும் 11 பயணப் பைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. அத்துடன், குறித்த போதைப்பொருட்களைக் கொண்டுவந்ததாகச் சந்தேகிக்கப்படும் டிங்கிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 200 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் 275 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயினும் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஐஸ் போதைப்பொருள் 200 பொதிகளிலும், ஹெரோயின் 275 பொதிகளிலும் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் டிங்கிப் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு காலப்பகுதியில், இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம், சுமார் 97 பில்லியன் ரூபா மொத்த வீதிப் பெறுமதியுடைய அபாயகரமான போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாகப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இணையாக, நாட்டின் கடற்பரப்பிலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடற்படை, கடலோரக் காவல்படை, ஏனைய ஆயுதப் படைகள், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன உள்நாட்டு, வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது எனவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய சட்டவிரோதச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை 1818 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குமாறு பிரதி பாதுகாப்பு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைப் பார்வையிடும் நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளையகத் தளபதி ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா, இலங்கை கடலோரக் காவல்படைப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்கில், கடற்படையினர், கடலோரக் காவல்படை, ஏனைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து இவ்வாறான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






