உயிருக்கு ஆபத்தான நிலையில் காட்டு யானை: தீவிர சிகிச்சை தொடர்கிறது.!!!
• கனமழை, வெள்ளநீருக்கு மத்தியில் மீட்புப் பணிகள்; இரவு பகலாகக் கண்காணிக்கும் வனவிலங்கு அதிகாரிகள்.
-தில்சாத் பர்வீஸ்-
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று பகுதியில் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்துள்ள காட்டு யானையைக் காப்பாற்றுவதற்கான தீவிர மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை வீழ்ந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆண் யானைக்கு, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழுவினர், இராணுவத்தினர் மற்றும் சம்மாந்துறை பொலிஸார் இணைந்து சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 15 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்படும் இந்த யானையின் உடலமைப்பு பொதுவாக நல்ல நிலையில் காணப்படுகின்ற போதிலும், அதன் வயிற்றுப் பகுதி வழக்கத்திற்கு மாறாக வீங்கியுள்ளதாகவும், வெளிப்புறத்தில் வெளிப்படையான காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யானையின் இந்த நிலைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், நஞ்சுப் பொருட்களை உட்கொண்டிருக்கலாம் அல்லது பொலித்தீன் போன்ற செரிமானமாகாத பொருட்களை உட்கொண்டதால் குடல் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணைகளையும் மருத்துவ நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவு, அம்பாறை வனவிலங்கு அலுவலகம் மற்றும் சம்மாந்துறை வனவிலங்கு பிரிவு அலுவலகம் ஆகியன இணைந்து சிகிச்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
இதற்கமைய, நேற்று (22) யானைக்கு அத்தியாவசிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் உடல்நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கனமழையால் சிகிச்சைப் பணிகளுக்கு சவால்
இப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக, யானை வீழ்ந்துகிடக்கும் இடத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவச் சிகிச்சைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, சிகிச்சைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக மணலைப் பயன்படுத்தி நிலத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் வனவிலங்கு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவதற்காக இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்மாந்துறை பொலிஸாரும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
இரவு பகலாகக் கண்காணிப்பு
யானையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், உரிய நேரங்களில் மருந்துகளை வழங்குதல் மற்றும் அதன் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வனவிலங்கு அதிகாரிகள் இரவு பகலாக சம்பவ இடத்தில் தங்கியிருந்து செயற்பட்டு வருகின்றனர்.
யானையின் உடல்நிலை மற்றும் சிகிச்சைக்கான அதன் எதிர்வினைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைப் பாதுகாப்பாகக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அது பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே தற்போது அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.




