தொழிற்கல்வித் துறையை மேம்படுத்த ரூ. 8,000 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை வழங்கும் வகையில் தொழிற்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், தொழிற்கல்வித் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக 8,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று (23) ஆரம்பமான Sri Lanka Skills Expo 2026 தேசியக் கண்காட்சியில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இக்கண்காட்சி ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களைச் சிறப்பு மேன்மை நிலையங்களாகத் தரமுயர்த்துவதுடன், மேலும் 50 பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற திறன்களைக் கொண்ட இளைஞர், யுவதிகளை உருவாக்குவதும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற தேசிய தொழில்சார் தகைமைகளை (NVQ) வழங்குவதும் இக்கண்காட்சியின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.
அத்துடன், 2027ஆம் ஆண்டு முதல் ஆறாம் தரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக, மாணவர்களுக்கு பல்வேறு தொழில் துறைகள் தொடர்பான அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்கல்விக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி, இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளையும் பொருளாதார முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களையும் விரிவுபடுத்துவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










