வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட அபிவிருத்தி அவசியம்; அரச சேவையிலும் விரிவான மறுசீரமைப்பு தேவை – ஜனாதிபதி.!!!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் முறையான திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சுகள் மற்றும் அரச துறைகளின் செயல்திறன் தொடர்பான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தென் மாகாணத்தில் திட்டமிடப்படாத கட்டுமானங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், அதுபோன்ற நிலைமை வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படாத வகையில் திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இராணுவ முகாம்களின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை தேவைக்கேற்ப விடுவிப்பதுடன், முதலீடுகளுக்குப் பொருத்தமான விசாலமான காணிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, விவசாய நோக்கங்களுக்காக காணிகளை வழங்கும்போது வனவள மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தரமான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் அரச துறையில் விரிவான மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும், செயல்திறன் குறைந்த நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகளில் வழக்குகள் தாமதமடைவதற்கு காரணமாக உள்ள இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணியிட வெற்றிடங்களையும் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பிரதி அமைச்சர் ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.