கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே நியமனம்.!!!
இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, 2026 ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, புதன்கிழமை (08) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவிடம் கையளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, 1992ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது ஆட்சேர்ப்பின் மூலம் இலங்கை கடற்படையில் இணைந்தார். 1994ஆம் ஆண்டு அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த அவர், பின்னர் இலங்கை, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடற்படை கட்டளை, சிக்னல், பாதுகாப்பு அறிவியல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான உயர்கல்வி மற்றும் சிறப்புப் பயிற்சிகளை வெற்றிகரமாகப் பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனவரியில் ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படையில் அதிவேகத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரி, பல கடற்படை கப்பல்கள் மற்றும் தளங்களின் கட்டளை அதிகாரி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது வடக்குக் கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதியாகவும் பொறுப்புத் தளபதியாகவும் பணியாற்றி வரும் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கடற்படை ரக்பி சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளில் மூன்று தசாப்தங்களுக்கு அண்மையாகச் சேவையாற்றியுள்ள அவர், வீரச் செயல்களுக்காக ரண விக்ரம பதக்கம், ரணசூர பதக்கம் மற்றும் சிறப்பான சேவை, களங்கமற்ற நன்னடத்தை ஆகியவற்றுக்காக உத்தம சேவா பதக்கம் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி இலங்கை கடற்படைத் தளபதிகளால் எட்டு முறை பாராட்டுக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

