உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Share :

கிழக்கின் மறைக்கப்பட்ட வரலாறு: ஹிஸ்புல்லாஹ்வின் தியாகமும் தலைமையும் மீண்டும் பேசப்படும் தருணம்.!!!

“அன்று ஹிஸ்புல்லாஹ் இல்லாதிருந்தால்… காத்தான்குடி என்றொரு முஸ்லிம் நகரமே இருந்திருக்காது”

-எஸ். சினீஸ் கான்-

வரலாறு சில நேரங்களில் மிகக் கொடூரமானது. அது தியாகங்களை எளிதில் மறந்துவிடுகிறது.. உண்மைகளைத் தமக்குள் புதைத்துக் கொள்கிறது. ஆனால், கிழக்கு மாகாணத்தின், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வும் வரலாறும் யாருடைய குருதியோடும் கண்ணீரோடும் எழுதப்பட்டது என்பதை நடுநிலையான எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. அந்த வரலாற்றின் அசைக்க முடியாத பெருந்தூண் தான் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்.

இன்று நாம் அனுபவிக்கும் நிம்மதியும், நாம் வாழும் இந்த நிலமும் சும்மா கிடைத்துவிடவில்லை. அதன் பின்னணியில் ஒரு தனிமனிதனின் அசாத்திய துணிச்சலும், இறைவனின் பெரும் கிருபையும் கலந்திருக்கிறது என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய காலம் இது.

மரணத்தின் நிழலும், இறைவனின் பாதுகாப்பும்.
வருடம் 2000. கிழக்கு மண்ணின் மாபெரும் ஆளுமையாகவும், முஸ்லிம்களின் அரசியல் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அந்த கருப்பு அத்தியாயம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியது. முஸ்லிம் சமூகம் தலைமைத்துவத்தை இழந்து, திக்கற்று நின்ற அந்த இக்கட்டான காலகட்டத்தில், பயங்கரவாதிகளின் அடுத்த முக்கிய இலக்காக (Target) குறிவைக்கப்பட்டவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.

எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு, கிழக்கு முஸ்லிம்களின் குரலை நசுக்க நினைத்த பயங்கரவாதிகள், ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஒழித்துக்கட்ட மிக மோசமான, கொடூரமான இரண்டு உயிர்ச்சுவட்டுத் தாக்குதல்களைத் தொடுத்தனர். மரணம் அவரை மிக நெருங்கித் தீண்டப் பார்த்த தருணங்கள் அவை. ஆனால், அகிலத்தைப் படைத்த இறைவனின் பேரருளும் பாதுகாப்பும் அவருக்கு அரணாக நின்றது.

குண்டுகளும் துப்பாக்கி ரவைகளும் அவரது உயிரைப் பறிக்க முயன்ற போதிலும், இறைவனின் உதவியால் அவர் அந்த மிக மோசமான கொடூரமான தாக்குதல்களில் இருந்து அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டார்.

“பயங்கரவாதிகளின் பட்டியலில் அடுத்த முக்கிய இலக்காக இருந்தும், மரணத்தின் வாயிலில் நின்று மீண்டு வந்தவர் அவர். அந்தப் பாதுகாப்பு, இந்தச் சமூகத்திற்காக அவர் செய்ய வேண்டிய இன்னும் பல பணிகளுக்காக இறைவன் கொடுத்த ஆயுள் அன்றி வேறில்லை.”

தனி ஒருவனாக நின்ற கிழக்கு மாகாணத்தின் குரல்.
அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின், கிழக்கு மாகாணமே அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயிருந்தது. பயங்கரவாதத்தின் கொடூரப் பிடிக்குள் ஒட்டுமொத்த மாகாணமும் சிக்கியிருந்த அந்த இருண்ட காலத்தில், முஸ்லிம்களுக்காகப் பேச, அவர்களது அச்சத்தைப் போக்க வீதிக்கு வரக்கூட தலைவர்கள் அஞ்சிய தருணம் அது.

யாருமற்ற, அநாதரவான அந்தச் சூழலில், தனி ஒருவனாக முழு கிழக்கு மாகாணத்திலும் அச்சமின்றிப் பயணம் செய்தவர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்.

துப்பாக்கிகளின் சத்தங்களுக்கு மத்தியிலும், எந்த நொடியிலும் மரணம் நிகழலாம் என்ற அச்சத்திற்கு மத்தியிலும், தனி ஒரு மனிதனாக கிராமம் கிராமமாகச் சென்று முஸ்லிம்களுக்குத் தைரியமூட்டினார்.

அவர்களது உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஓங்கி முழங்கினார்.
இன்று அந்த உன்னதமான, உணர்வுபூர்வமான வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கலாம். அல்லது சுயநல அரசியல் சூழலில் பலரால் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று அவர் காட்டிய துணிச்சல் தான் இன்று கிழக்கில் முஸ்லிம்கள் நிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளம் என்பதை மறுக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் கிராமங்களின் காவல் அரண்.
உண்மைச் சரித்திரத்தைப் பேசுவதானால், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எத்தனையோ முஸ்லிம் கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு, இன்றுவரை வரைபடத்தில் இருப்பதற்குக் காரணம் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் என்ற அந்த ஒற்றை மனிதனின் ஆளுமையும் தியாகமும் தான்.

பயங்கரவாதத்தின் கோரப் பசிக்கு இரைக்காகவிருந்த எத்தனையோ எல்லைக் கிராமங்களை, தனது அரசியல் சாணக்கியத்தாலும், நெஞ்சுரத்தாலும் அவர் அரணாக நின்று பாதுகாத்தார். அவர் மட்டும் அன்று அஞ்சியிருந்தால், இன்று அந்த கிராமங்கள் இருந்த சுவடே இல்லாமல் போயிருக்கும்.

காத்தான்குடி: ஒரு தலைவனால் உருவான நகரம்.
மிக முக்கியமாக, நாம் இன்று பெருமையோடு பேசும், பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் நிமிர்ந்து நிற்கும் “காத்தான்குடி” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.

மிக வெளிப்படையாக, நெஞ்சில் கை வைத்துச் சொல்வதானால், அன்று ஹிஸ்புல்லாஹ் எனும் ஆளுமை மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று காத்தான்குடி என்ற ஒரு நகரமே இருந்திருக்காது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களினாலும், பேரினவாத நெருக்கடிகளினாலும் நாலாபுறமும் சூழப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காத்தான்குடியை, ஒரு நவீன, பாதுகாப்பான, தன்னிறைவு பெற்ற நகரமாக மாற்றியமைத்த பெருமை அவரை மட்டுமே சாரும்.

காத்தான்குடியின் ஒவ்வொரு அங்குல அபிவிருத்தியிலும், அதன் பாதுகாப்பிலும் அவரது வியர்வையும், இரத்தமும் கலந்திருக்கிறது.

காலத்தால் அழியாத வரலாறு
தலைவர்கள் வரலாம், போகலாம். ஆனால், ஆபத்தான காலப்பகுதியில், சமூகமே அழியும் விளிம்பில் நின்றபோது, தன் உயிரைப் பணயம் வைத்து சமூகத்தைக் காத்த தலைவர்களை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்தச் சமூகத்திற்காகச் செய்த தியாகங்களும், பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் தனி ஒருவராக நின்று நடத்திய போராட்டங்களும் தற்காலிக அரசியல் லாபங்களுக்காக மறைக்கப்படலாம்.

ஆனால், கிழக்கு மண்ணின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்தின் மண்ணும், காத்தான்குடியின் ஒவ்வொரு வீதியும் அவரது பெயரை என்றென்றும் நன்றியோடு உச்சரித்துக் கொண்டே இருக்கும். அதுதான் மறுக்க முடியாத உண்மை வரலாறு.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214791

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time