கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 5.1 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு: இந்தியப் பிரஜை கைது.!!!
–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்–
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச சந்தையில் சுமார் 5 கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உயர்ரக ‘குஷ்’ போதைப்பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது இந்தப் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமிலிருந்து VN671 என்ற இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த இளைஞர், அதிகாலை 1.15 மணியளவில் வருகை முனையத்தின் ‘பசுமைப் பாதை’ (Green Channel) ஊடாக எவ்வித தடையுமின்றி வெளியேற முயற்சித்துள்ளார்.
எனினும், அவரது நடத்தை மற்றும் உடல் அசைவுகளில் காணப்பட்ட அசாதாரண பதற்றத்தைக் கவனித்த சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர், அவரைத் தடுத்து நிறுத்தி பயணப் பொதிகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, பயணப் பொதிக்குள் நுட்பமான முறையில் பொலித்தீன் உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோகிராம் 100 கிராம் எடையுடைய (5.1 கிலோகிராம்) உயர்ரக ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கைச் சந்தையில் சுமார் 51 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


