காத்தான்குடியில் மாபெரும் இரத்த தான முகாம்: 130 பேர் இரத்த தானம்.!!!
• மர்ஹும் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் வபாத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு.
காத்தான்குடி மக்களின் ஆன்மீக வழிகாட்டியாக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி, மறைந்த மர்ஹும் உஸ்தாதுனா ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வபாத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்த தான முகாமில் 130 இரத்தக் கொடையாளர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியுள்ளனர்.
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீன் அமைப்பின் ஏற்பாட்டில், இன்று (25) ஞாயிற்றுக்கிழமை, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனபீடத்தில் அமைந்துள்ள மர்ஹும் ஷைகுல் பலாஹ் ஞாபகார்த்த மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்றது.
ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்த மர்ஹும் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், மனித உயிர்களைக் காப்பாற்றும் உன்னதமான இரத்த தானப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 130 இரத்தக் கொடையாளர்கள் தமது இரத்தத்தைத் தானமாக வழங்கி, உயிர்களைக் காப்பாற்றும் மனிதநேயப் பணியில் பங்களிப்புச் செய்துள்ளனர்.
இரத்தம் தேவைப்படும் நோயாளர்களுக்கு உதவுவதுடன், மனிதநேயம், சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இத்தகைய சமூக நலப் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டது.
இம்முகாமில் பங்கேற்று இரத்த தானம் வழங்கிய அனைத்து இரத்தக் கொடையாளர்களுக்கும், நிகழ்வை ஏற்பாடு செய்த மஜ்லிஸுல் பலாஹிய்யீன் அமைப்பினருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் தமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.























