இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகக் குழுவினர் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு.!!!
• விண்வெளி விழிப்புணர்வு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U.S. Space Forces Pacific – SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான லெப்டினன்ட் கேணல் ஷும்பெய் புஜிமுரா (Lieutenant Colonel Shumpei Fujimura) உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், வெள்ளிக்கிழமை (23) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, விண்வெளி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட இருதரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.



