ரூ. 130 மில்லியன் செலவில் 15 நவீன வாகனங்கள் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு கையளிப்பு.!!!
• 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே தடவையில் 15 வாகனங்கள் கொள்வனவு.
உலக வங்கியின் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், 130 மில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 15 நவீன வாகனங்கள் இன்று (23) மருத்துவ விநியோகப் பிரிவிடம் (MSD) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இதன்படி, 11 நவீன ரீச் ட்ரக் (Reach Truck) வாகனங்களும் நான்கு ஃபோர்க்லிஃப்ட் (Forklift) வாகனங்களும் மருத்துவ விநியோகப் பிரிவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே தடவையில் 15 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன வாகனங்களின் பயன்பாட்டின் மூலம், மருத்துவப் பொருட்களின் கையாளுகை மற்றும் முகாமைத்துவச் செயற்பாடுகளை மேம்படுத்துவதுடன், மருந்துகளைப் பாதுகாப்பாகக் கையாளவும் விநியோக நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் மருந்து களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டில் காலி, கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் மூன்று புதிய மருந்துக் களஞ்சியத் தொகுதிகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், நாட்டின் மருந்து விநியோக வலையமைப்பையும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தையும் மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ விநியோகம்) வைத்தியர் எஸ்.பி.ஏ.எல். ரணவீர மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தேதுணு டயஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




