இலங்கை – மாலைத்தீவு நட்புறவின் மற்றுமொரு மைல்கல்: ரூ. 5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான மருந்துகள் கையளிப்பு.!!!
மாலைத்தீவு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஐந்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கம் நேற்று (22) பிற்பகல் மாலைத்தீவுக்கு வழங்கியுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், மாலைத்தீவின் சுகாதாரம், குடும்பம் மற்றும் நலன்புரி அமைச்சர் கீலா அலியின் கோரிக்கைக்கு அமைவாக, அந்நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த மருந்துகள் மாலைத்தீவு பிரதம ஆணையாளர் மசூத் இமாத்திடம் கையளிக்கப்பட்டன.
இந்த மருந்து வழங்கும் நடவடிக்கைக்கு மருத்துவ விநியோகப் பிரிவு, அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் மேற்கு மாகாண மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து பங்களிப்பு வழங்கியுள்ளன.
இந்நிகழ்வில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்த மாலைத்தீவு பிரதம ஆணையாளர் மசூத் இமாத், இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவையும் நெருங்கிய தொடர்புகளையும் நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தேதுணு டயஸ் உள்ளிட்ட அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மேற்கு மாகாண மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் மாலைத்தீவு பிரதம ஆணையாளர் அலுவலக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த மருந்து வழங்கல் அமைந்துள்ளது.
