மகப்பேறு பரிசோதனை முடிந்து வீடு திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் – டிப்பர் மோதி பெண் பலி; கர்ப்பிணி உட்பட 3 பேர் காயம்.!!!
மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி–தும்பாலை பிரதான வீதியில், பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணித் தாய் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று பரிசோதனையை முடித்துக்கொண்டு, தமது முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, கூழாவடி–தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பாலையடிவட்டை பகுதியிலிருந்து வந்த கனரக டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 40 வயதுடைய சந்திரன் புவனசுந்தரி என்ற பெண், உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த கர்ப்பிணித் தாய் உட்பட ஏனைய மூவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் தாக்கத்தில் முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.
பொதுமக்கள் கவலை
குறித்த பகுதியில் கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக அதிவேகமாகப் பயணிப்பதால், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வாறான விபத்துகள் தொடர்வதைத் தடுக்கும் வகையில், கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களையும் வெல்லாவெளி பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன், இரு வாகனங்களின் சாரதிகளையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
