சவூதி அரேபியாவில் இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து.!!!
• தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி – வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.
எம்.ஐ. அப்துல் நஸார்
சவூதி அரேபியாவில் இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், 2026 ஒக்டோபர் 13ஆம் திகதி சவூதி உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு அனோஜன் சிவராசா மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் பலனாகவே இந்தத் தீர்வு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரசாங்கத்துக்கு நன்றி
இந்தச் சட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு பிரதியமைச்சர் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கைத் தூதரக அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் பங்களிப்புகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இந்த வழக்கில் தொடர்ந்து பணியாற்றிய இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினர் ஆகியோருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவின் வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பின்னணியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு, அவரது குடும்பத்தினருக்கு முக்கியமான நிம்மதியை அளித்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது.