பௌத்த பிக்குகளின் காவி உடைக்கு முழுமையான அனுமதி: சிறைச்சாலை விதிகளில் திருத்தம் முன்மொழிவு.!!!
இலங்கையில் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையில், சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிரந்தரக் கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதன்படி, சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவும், அவர்கள் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், பௌத்த பிக்குகள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களின் காவி உடை தொடர்பாக பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுக்கும் அவரவர் மதங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விதிமுறைகளை மாற்றியமைத்துப் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளை இலக்கம் 356 இல் திருத்தம் செய்து, 356(அ) என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதற்கும், திணைக்களக் கட்டளை இலக்கம் 550 இல் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டபோது ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் திருத்தங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள சிறைச்சாலை நிரந்தரக் கட்டளைகளைத் திருத்தியமைக்குமாறு பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.