பதிவுகள் இன்றி மற்றும் போலிப் பதிவுகளுடன் 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; ஒருவர் கைது.!!!
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஏழு உயர் திறன் மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறித்த மோட்டார் சைக்கிள்கள், கல்வியங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள மர விற்பனை நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஏழு மோட்டார் சைக்கிள்களில் நான்கிற்கு உரிய பதிவுகள் இல்லையெனவும், ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் போலியான பதிவுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோட்டார் சைக்கிள்களை உடைமையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



