நாட்டில் சீரற்ற வானிலையால் 7,651 பேர் பாதிப்பு; 8 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம் – ஒருவர் மாயம்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) ஞாயிற்றுக்கிழமை (18) காலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 2,106 குடும்பங்களைச் சேர்ந்த 7,651 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்துடன், 26 வீடுகள் முழுமையாகவும், 1,390 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மண்சரிவு மற்றும் பாறைச் சரிவு அபாயம்
மலைநாடு மற்றும் தென் பகுதிகளில் பெய்துவரும் தொடர் அடைமழை காரணமாகப் பல இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைச் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று மாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது கடுகன்னாவ பகுதியில் பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி, பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவைகள் பாதிப்பு; வீதிப் போக்குவரத்துக்கும் தடை
கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
உடரட்ட ரயில் பாதையில் கம்பளையிலிருந்து நானுஓயா வரையிலான ரயில் சேவைகளும், கண்டி மற்றும் மாத்தளை இடையிலான ரயில் சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது நானுஓயாவிலிருந்து பதுளை வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பூஜாப்பிட்டிய – அன்கும்புர வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதற்கமைய, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்களின்படி, நில்வளா கங்கையின் நீர்மட்டம் தாஹிகஹகொட மற்றும் பனடுகம பகுதிகளில் சிறிய வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கலா ஓயா – ராஜாங்கனை, தெதுரு ஓயா, பொல்கொல்ல, குக்குலே கங்க மற்றும் கனியன் ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
12 மாவட்டங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு
ஒருபுறம் கடும் மழையும் வெள்ளமும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் எல் நினோ (El Niño) பருவநிலை மாற்றத்தின் விளைவாக நாட்டின் 12 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 41,725 குடும்பங்களைச் சேர்ந்த 137,953 பேர் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவைகள் பிரிவினரால் பவுசர்கள் மூலம் தொடர்ச்சியாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
பிற்பகலிலும் பலத்த மழைக்கு எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் வேளையிலும் நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் வசிப்போர் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்த அபாயங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.