ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு: வினாடிக்கு 7,884 கன அடி நீர் வெளியேற்றம்.!!!
–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்–
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் மொத்தம் 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவை நோக்கி வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலும் மாற்றம்
இதேவேளை, மலையகத்தின் மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது.
நேற்று பெய்த அடைமழை காரணமாக, இன்று அதிகாலை வரை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. எனினும், இன்று (22) அதிகாலை நீர்மட்டம் சற்றுச் சீரடைந்ததைத் தொடர்ந்து, ஒரு வான் கதவு தானாகவே மூடிக்கொண்டதாகப் பொறியியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்மட்டம் மீண்டும் உயரும்பட்சத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தொடர்ச்சியான மழை வீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்ற நிலைமைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றனர்.