இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டங்கள் கடுமையாகின்றன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!
‘முழு நாடும் ஒன்றாக’ தேசியத் திட்டத்தின் கீழ் 3 இலட்சத்துக்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது; பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன
இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ‘முழு நாடும் ஒன்றாக’ என்ற தேசியத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் இதுவரை 322,218 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 ஒக்டோபர் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 97,074 ஹெரோயின் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றின் மூலம் 2,485.1 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், 18,710 ஐஸ் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு, 3,032.07 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், 261 கொகேன் சுற்றிவளைப்புகள் மூலம் 297.1 கிலோகிராம் கொகேன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 65,765 கஞ்சா சுற்றிவளைப்புகள் மூலம் 11,146 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, சுமார் 16.7 மில்லியன் கஞ்சா செடிகளும் குறித்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதுடன், அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.