பீடி இலைகளுடன் பயணித்த டிங்கி படகு சிக்கியது; இருவர் கடற்படையினரால் கைது.!!!
சிலாவத்துறை கல்லாறு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படும் 690 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கை நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினரால் சிலாவத்துறைக்கு அப்பால் கல்லாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, குறித்த படகில் 20 உறைகளில் பொதியிடப்பட்டிருந்த 690 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், சந்தேகநபர்கள் இருவர் மற்றும் டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34 மற்றும் 41 வயதுடைய ஆனவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


