ஹிஸ்புல்லாஹ் – சவூதி பதில் தூதுவர் சந்திப்பு; பல்வேறு விடயங்கள் கலந்துரையாடல்.!!!
-எஸ். சினீஸ் கான்-
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் மேதகு யாசர் பின் அப்துல்ரஹ்மான் அல்-ஹாஸ்மி அவர்களுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கு சவூதி அரேபியா தொடர்ச்சியாக வழங்கி வரும் உதவிகள், ஆதரவுகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், சவூதி அரேபியா – இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், இராஜதந்திர ரீதியிலான விடயங்கள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
