கப்பல் – துறைமுக பாதுகாப்பை உறுதிப்படுத்த காலியில் கடற்படையின் சிறப்பு பயிற்சி.!!!
-கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்-
இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு (ISPS) பயிற்சி, இன்று (08) காலி துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியின் போது, அனுமதியற்ற நபர்கள் சட்டவிரோதமாக துறைமுக வளாகத்திற்குள் நுழைவதைத் தடுப்பது, அவ்வாறான சம்பவங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது, அத்துடன் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மேலும், துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான பதிலளிப்பை மேற்கொள்வது தொடர்பான நடைமுறைச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரநிலைகளுக்கு பதிலளிக்கும் நடைமுறைகள் தொடர்பான கோட்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்தப் பயிற்சியின் மூலம் காலி துறைமுகத்தின் பாதுகாப்புடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டதுடன், அவசரநிலைகளின் போது விரைவாகப் பதிலளிக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறையில் செயல்படுத்தும் திறனும் மேம்படுத்தப்பட்டது.
அத்துடன், சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு விதிமுறை (ISPS Code) இன் நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்கு அமைவாக, காலி துறைமுகத்தின் பாதுகாப்புத் தயார்நிலையைப் பேணுவதற்கான முக்கிய நடவடிக்கையாகவும் இந்தப் பயிற்சி அமைந்துள்ளது.
இப்பயிற்சிக்கு தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் தீயணைப்புப் பிரிவு, CBRN பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு ஆகியன செயற்பாட்டு ஆலோசனை மற்றும் பங்களிப்பை வழங்கின.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸின் துறைமுக பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.





