ஹெய்டியில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்கு 185 இலங்கை பொலிஸ் அதிகாரிகள்.!!!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பொலிஸ் பணிகளுக்காக ஹெய்டிக்குச் செல்லத் தகுதி பெற்ற 185 இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளார்.
இதற்கான நிகழ்வு கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி மாலை கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
ஹெய்டியில் ஐ.நா. அமைதிகாக்கும் பொலிஸ் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளைச் சந்தித்த பொலிஸ்மா அதிபர், சர்வதேசப் பணியை சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இதன்போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பொலிஸ்மா அதிபருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதுடன், ஹெய்டிக்குப் புறப்படவுள்ள அதிகாரிகளுடன் அவர் குழுப் புகைப்படத்திலும் கலந்துகொண்டார்.
மூன்று குழுக்களாக ஹெய்டிக்குப் பயணம்
185 அதிகாரிகளும் மூன்று குழுக்களாக ஹெய்டிக்குச் செல்லவுள்ளனர். இதில் இரண்டு குழுக்கள் ஒக்டோபர் மாதத்திலும், மற்றைய குழு நவம்பர் மாதத்திலும் ஹெய்டிக்குப் புறப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் 174 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்தவர்களாவர். மேலும், பொலிஸ் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு தரங்களைச் சேர்ந்த அதிகாரிகள்
குழுவில் ஒரு பொலிஸ் அத்தியட்சகர், 3 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், 2 பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், 17 பொலிஸ் பரிசோதகர்கள், ஒரு பெண் பொலிஸ் பரிசோதகர், 11 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2 பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குகின்றனர்.
மேலும், 78 பொலிஸ் சார்ஜன்ட்கள், 8 பெண் பொலிஸ் சார்ஜன்ட்கள், 2 சார்ஜன்ட் மேஜர் சாரதிகள், 7 பொலிஸ் சார்ஜன்ட் சாரதிகள், 38 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 4 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் 7 பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஹெய்டியில் ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸாருக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிழக்கு திமோர் மற்றும் ஹெய்டியில் இடம்பெற்ற ஐ.நா. நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்களித்திருந்தார் என இலங்கை பொலிஸின் தகவல்கள் தெரிவிக்கின்றன.