அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்திய விவகாரம்: பகிரங்க மன்னிப்புக் கோரினார் முன்னாள் அமைச்சர் பெளஸி.!!!
• உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரச பத்திரிகையில் மன்னிப்பு விளம்பரம் வெளியீடு – ரூ.6.6 மில்லியனை அரசாங்கத்துக்கு செலுத்தவும் உத்தரவு.
அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்திய விவகாரத்தில், முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, ஒக்டோபர் 24ஆம் திகதி அரசாங்கப் பத்திரிகையொன்றில் அவர் மன்னிப்புக் கோரும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியதன் மூலம், இலங்கை அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு சுமார் 6.6 மில்லியன் ரூபாவைச் செலுத்துமாறும், பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருமாறும் முன்னாள் அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் மன்னிப்புக் கோரும் விளம்பரங்களை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, சிலுமின, Sunday Observer மற்றும் தினகரன் ஆகிய அரசாங்கப் பத்திரிகைகளில், குறித்த அரச வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப் பக்க அளவிலான மன்னிப்பு விளம்பரங்களை வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அரச வளங்களைப் பயன்படுத்துவதில் பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரச வளங்கள் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவற்றைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தும் விவகாரங்களில் சட்டரீதியான பொறுப்புக்கூறல் அவசியம் என்பதையும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.