சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு; மேலதிக விசாரணைக்காக சுங்கத்திடம் ஒப்படைப்பு.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு களப்புப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (19) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 157 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மிதந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நான்கு மூடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து 157 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டன.
குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளின்போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திடம் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
