காத்தான்குடி நகர சபைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது; வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை.!!!
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில், உள்ளூராட்சி மன்றங்கள் பிரிவில் காத்தான்குடி நகர சபை வெள்ளி விருதினைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது.
இவ்விருது, சிறந்த சுற்றாடல் பராமரிப்பு மற்றும் வினைத்திறனான திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருது வழங்கும் விழா நேற்று (19) திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.
காத்தான்குடி நகர சபை சார்பில் நகர முதல்வர் S.H.M. அஸ்பர், நகர சபையின் செயலாளர் ரினோஸா முப்லி மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பதிகாரி M.M.M. பைஸ் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இம்முறை உள்ளூராட்சி மன்றங்கள் பிரிவில் காத்தான்குடி நகர சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய இரண்டு சபைகளுக்கு மாத்திரமே வெள்ளி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் தங்க விருது வழங்கப்படாத நிலையில், இவ்விரு சபைகளும் தேசிய மட்டத்தில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் காத்தான்குடி நகர சபை முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், நகரின் சுற்றாடல் மேம்பாட்டிற்கான மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.













