மட்டக்களப்பில் 113 வீடுகளைத் திருத்தும் திட்டம்; 50 பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு.!!!
-B.M. பயாஸ்-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளைத் திருத்துவதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜீ. சுகுமாரன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 113 வீடுகளைத் திருத்தும் பணிகளை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக, இன்று நடைபெற்ற நிகழ்வில் 50 பயனாளிகளுக்கு வீடுகளைத் திருத்துவதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏற்கனவே 30 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த வீடமைப்புத் திருத்தப் பணிகள் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர் எஸ். வினோராஜின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு கடந்த ஐந்து வருடங்களாக 88.36 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தவிசாளர் பொறியியலாளர் ஜீ. சுகுமாரனின் முயற்சியினால் 2026ஆம் ஆண்டுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 145 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாகாணத்தில் வீடமைப்புத் திருத்தப் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







