எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க லிட்ரோ அதிரடி; 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சிலிண்டர்கள் விநியோக இலக்கு.!!!
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிகரித்துள்ள சமையல் எரிவாயுக்கான தேவையைக் கருத்திற்கொண்டு, கடந்த 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு மேலதிகமாக, நேற்று (24) ‘GOODWILL’ கப்பல் மூலம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், நாளை (26) மற்றுமொரு எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விநியோக நடவடிக்கைகள் மூலம், எதிர்வரும் நாட்களில் சந்தையில் நிலவும் எரிவாயுக்கான தேவையைப் பூர்த்தி செய்து, நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.