பிரஜா சக்தி திட்டத்தில் மட்டக்களப்புக்கு நெல் உலர்த்தும் இயந்திரங்கள்; விவசாயிகளின் இழப்பைத் தடுக்கும் நடவடிக்கை.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள நெல் உலர்த்தும் இயந்திரங்கள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (06) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய முறையில் உலர்த்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் கணிசமான பொருளாதார இழப்பைச் சந்தித்தனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், பிரஜா சக்தி திட்டத்தின் முதற்கட்டமாக மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நவீன நெல் உலர்த்தும் பாரிய இயந்திரங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு, இயந்திரங்களை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்தல், இயந்திரங்களின் தரநிலைகள், நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ரீ. சுமன், திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் அறுவடைப் பயிர்களை பாதுகாத்து, நியாயமான விலையில் சந்தைப்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக இந்தத் திட்டம் அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
