‘Dream Destination’ திட்டத்தில் நவீனமடைந்த நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் திறப்பு; ரூ.40 மில்லியன் செலவில் பயணிகளுக்கு புதிய வசதிகள்.!!!
அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதும் 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் இன்று (06) மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையிலும் Clean Sri Lanka செயலகத்தின் ஒருங்கிணைப்பிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்படாததால் பாதுகாப்பற்ற மற்றும் வசதியற்ற நிலையில் காணப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம், தற்போது முழுமையான நவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த நிலையத்தில் பயணிகள் மேம்பாலம், புதிய கூரை, இரண்டாவது நடைமேடை விரிவாக்கம், சுகாதார வசதிகள், புதிய மின்விளக்கு அமைப்பு, பயணிகள் அமர்விடங்கள், உத்தியோகபூர்வ இல்ல புனரமைப்பு மற்றும் உள்பாதை கார்பெட் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் புனரமைப்பிற்காக MAGA Engineering (Pvt.) Ltd. நிறுவனம் ரூ.40 மில்லியன் நிதி வழங்கியுள்ளதுடன், NIO Engineering தொழில்நுட்ப மற்றும் சேவை பங்களிப்பை வழங்கியுள்ளது. பணிகள் கடந்த 2025 செப்டெம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ‘Dream Destination’ திட்டத்தின் பிரதான நோக்கம் புகையிரத சேவையை மேம்படுத்தி, பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வசதிகளை வழங்குவதாகும் என்றார். மேலும், பொதுப் போக்குவரத்தை வினைத்திறனுடன் மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த ஆண்டு முதல் கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாகும்புர மற்றும் கொழும்பு – ராகம ஆகிய வழித்தடங்களில் முதற்கட்ட மின்சார புகையிரத சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை பிரதிநிதிகள், Clean Sri Lanka செயலக அதிகாரிகள், இலங்கை புகையிரத திணைக்கள உயர் அதிகாரிகள், MAGA Engineering நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










