மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு விசேட நடவடிக்கை; 40 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!!!
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் நேற்று (06) பாரிய டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களம், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இலங்கை இராணுவம், இலங்கை பொலிஸார் மற்றும் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு நகரை மையமாகக் கொண்டு இந்த விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார் தலைமையில், டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட மாமாங்கம், புதூர், கல்லடி மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்த மற்றும் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்ட 40 வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் நீர் தேங்கியிருந்த இடங்கள் அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரித்து, வாரந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுமாறு சுகாதார அதிகாரி மக்களிடம் அறிவுருத்தினார்.




