கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்பு.!!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை அதிகரிப்பதுடன், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளுடன், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாட்டின் ஏனைய உள்நாட்டு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் உரிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



