சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தில் புதிய முன்னெடுப்புகள்: கிராமிய அபிவிருத்திக்கும் ஊழலற்ற அரச சேவைக்கும் முக்கியத்துவம்.!!!
சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்களைத் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது, சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்காலச் செயற்பாடுகள், கிராமிய அபிவிருத்திக்கான திட்டமிடல், தரவு முகாமைத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குதல், அரச சேவையில் நேர்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
அரச சேவையில் நேர்மையும் ஒருங்கிணைப்பும் அவசியம்!
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சமூக சக்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச அதிகாரிகளுக்கு இடையிலான சிறந்த தொடர்பும் ஒருங்கிணைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
அபிவிருத்திப் பணிகளுக்குத் தடையாக உள்ள பிரச்சினைகளை முறையாக அடையாளம் கண்டு தீர்வு காண்பதுடன், அரச அதிகாரிகள் குழுவாகச் சிந்தித்து திறமையாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரச சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு அதிகாரியும் தமது தொழில்முறைப் பொறுப்புகளுடன் தார்மீக விழுமியங்களையும் பேண வேண்டும். தனிப்பட்ட நலன்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஊழலற்ற சேவையை வழங்குவதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழலைத் தடுக்க உள்ளக முறைப்பாட்டுக் கட்டமைப்புகள்!
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் முன்னெடுத்த போராட்டங்களில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான எதிர்ப்புடன், அரச ஊழியர்களின் பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
தேர்தல்களின் மூலம் அரசியல்வாதிகளை மாற்றுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு இருந்தாலும், அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளை அதே முறையில் மாற்ற முடியாது. எனவே, அரச நிறுவனங்களில் இடம்பெறும் அநீதிகள், முறைகேடுகள் மற்றும் தவறான செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான உரிய வழிமுறைகள் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அநீதிகளுக்கு உள்ளாகும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைச் சொந்தத் தேவைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ பயன்படுத்துவது ஊழலாகும். இத்தகைய செயற்பாடுகள் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை நிறுவனங்களில் வழக்கமான நடைமுறையாக மாறிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் காரணமாக முதலீடுகள் குறைவடைதல், தேவையற்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல், நாட்டின் கடன் சுமை அதிகரித்தல், வெளிநாட்டு நாணய நெருக்கடி, வரிச்சுமை மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.
மக்கள் தங்களுக்குத் தெரிந்த முறைகேடுகளைப் பாதுகாப்பாகத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரச ஊழியர்களின் நேர்மையையும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
ஐந்து முக்கிய விடயங்களில் கவனம்!
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஐந்து முக்கிய தலைப்புகளின் கீழ் விளக்கமளித்தார்.
அதன்படி,
– 2027ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தித் தரவு முறைமையை உருவாக்குதல்.
– ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை (Innovation Hub) அறிமுகப்படுத்துதல்.
– மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்தல்.
– குளங்கள் மற்றும் குளத் தொடரமைப்புகள் தொடர்பான இணையவழித் தகவல் முறைமைக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்தல்.
– தொழில்முயற்சி அபிவிருத்தித் தரவு முறைமையை அறிமுகப்படுத்துதல்.
ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
கிராமிய வீதிகளுக்கான புதிய தரவுக் கட்டமைப்பு!
சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தை சமூக மற்றும் கிராமிய அபிவிருத்தியின் மையக் கட்டமைப்பாக மாற்றுவதே நோக்கம் எனக் குறிப்பிட்ட கபில ஜனக பண்டார, தேசிய அபிவிருத்திக்கான தரவுக் கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமான பணியாகும் என்றார்.
இதுவரை நான்கு தரவுக் கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக கிராமிய மட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட புதிய தகவல் கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 10,000 வீதிகளுக்கு மேலதிகமாக, ஏனைய கிராமிய வீதிகள் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கிய தரவுக் கட்டமைப்பொன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சமூக சக்தி செயலகமும் பொதுநிர்வாக அமைச்சும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்து ஜனவரி மாதத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டமைப்பின் ஊடாக கிராமிய மக்கள் முன்வைக்கும் வீதி அபிவிருத்திப் பரிந்துரைகளை உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி, அவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்றும் அவர் விளக்கினார்.
நீர் வள முகாமைத்துவத்திற்கும் முக்கியத்துவம்!
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் கடுமையான வறட்சி மற்றும் அதிக மழைவீழ்ச்சி போன்ற சவால்களுக்கு மத்தியில், நாட்டின் நீர்வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்வது அவசியம் எனவும் கபில ஜனக பண்டார தெரிவித்தார்.
குடிநீர் தேவைகள், விவசாயம், ஏனைய தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நீரைத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதற்கு உரிய தரவுகளும் தகவல்களும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒவ்வொரு கிராமத்தையும் இலக்காகக் கொண்டு மூன்று வருட அபிவிருத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூலோபாய தேசியத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பணிகளுக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி, தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
சமூகத்தின் தேவைகளை முதலில் அடையாளம் கண்டு, அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகளைப் பல்துறை நிபுணர் குழுக்களின் ஊடாக ஆராய்ந்து, சமூக சக்தி வேலைத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதே அடிப்படை நோக்கம் என்றும் அவர் கூறினார்.
கிராமியத் திட்டங்களை தேசிய அபிவிருத்தியுடன் இணைத்தல்!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார உரையாற்றுகையில், மாவட்ட மற்றும் பிரதேச செயலகக் கட்டமைப்புகளை அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் மையங்களாக மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கிராமிய அபிவிருத்திச் சபைகளால் முன்வைக்கப்படும் திட்டப் பரிந்துரைகள் கிராம மட்டத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், அவற்றின் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான ஒருங்கிணைப்புப் பொறுப்பு பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், மாகாண சபைகள் மற்றும் தேசிய மட்டத்திலான தொடர்புடைய நிறுவனங்களுக்கு உரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிராமிய மக்கள் தமது பிரதேசங்களில் முன்வைத்த பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்களை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதால், உடனடியாகப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை அடையாளம் கண்டு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தித் திட்டங்கள் நீண்டகால நிர்வாக நடைமுறைகளுக்குள் சிக்கிக்கொண்டால், வேலைத்திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறையக்கூடும். எனவே, நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தவறான புரிதல்களை முதிர்ச்சியுடன் தீர்த்து, திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கிராமங்களிலேயே சிறந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்குவதே இலக்கு!
தேசிய மட்டத்தில் திட்டமிடப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் சமூக அபிவிருத்திச் சபைகளுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ஆலோக பண்டார தெரிவித்தார்.
கிராமிய மட்டத்தில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் தேசிய அபிவிருத்தி நோக்கத்துடன் இணைக்கப்படுவதுடன், எதிர்கால முதலீடுகள் மற்றும் உதவிகள் தொடர்பான தகவல்களும் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கிராம மக்களை நகரங்களுக்கு இடம்பெயரச் செய்வதற்குப் பதிலாக, கிராமங்களிலேயே சிறந்த வாழ்க்கைத்தரத்தையும் வசதிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அரச அதிகாரிகள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்றி, நாட்டின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏனைய முக்கிய விடயங்கள் குறித்தும் விளக்கம்!
சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் 2026ஆம் ஆண்டு செயற்பாடுகள் தொடர்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன், சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எச்.எம்.கே.ஜே.பி. குணரத்ன விளக்கமளித்தார்.
மேலும், Clean Sri Lanka திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ திட்டம், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு முகாமைத்துவக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.











