காத்தான்குடியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு; பல உணவகங்கள், வெதுப்பகங்களுக்கு எதிராக வழக்கு.!!!
காத்தான்குடி பிரதேசத்தில் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) இன்று (08) பல உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் விசேட திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையின்போது, சுகாதார விதிமுறைகளை கடுமையாக மீறி தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த மனித பாவனைக்குப் பொருத்தமற்ற பல்வேறு உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், சுகாதார விதிமுறைகளை மீறும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எந்தவித சலுகையும் இன்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், பொதுமக்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம், சுகாதார நிலை, தயாரிப்பு மற்றும் காலாவதி திகதி உள்ளிட்ட விவரங்களை கவனமாக பரிசோதித்த பின்னரே பயன்படுத்துமாறு பொது சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








