அல்-குர்ஆன் பிரதிகள் விடுவிப்பில் இனியும் தாமதம் வேண்டாம்; அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கோரிக்கை.!!!
சுங்கத் திணைக்களத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை, மீளாய்வுக் குழுவின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ள நிலையில் மேலும் தாமதமின்றி விடுவிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
புனித அல் குர்ஆன் முஸ்லிம்களின் ஆன்மீக வாழ்வின் அடிப்படை வழிகாட்டியாகும். இந்நிலையில், அதன் பிரதிகள் நீண்டகாலமாக சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மதச் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஆன்மீக உரிமைகள் தொடர்பில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் பலமுறை பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தியதோடு, சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை மீளாய்வுக் குழுவின் அனுமதி கிடைத்த பின்னரே குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே இனியும் நிர்வாக அல்லது சுங்க நடைமுறைகளை காரணம் காட்டி தாமதப்படுத்த எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் கலாசார திணைக்களம், மீளாய்வுக் குழுவின் அனுமதிக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சுடன் இணைந்து குர்ஆன் பிரதிகளை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனாதிபதியுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலின்போது, மீளாய்வுக் குழுவின் அனுமதி கிடைக்காததே தாமதத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அமைச்சு உடனடியாக தலையிட்டு புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கேட்டுக்கொண்டார்.