ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு.!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (12) நிராகரித்துள்ளது.
‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ஷிரந்தி ராஜபக்ஷ இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு கடந்த 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது தொடர்பான விளக்கங்களை இன்றைய தினம் (12) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், ‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.