அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகள்; கல்விக் கட்டமைப்பை மேம்படுத்த அரசு அர்ப்பணிப்பு – பிரதமர் ஹரிணி.!!!
• பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் மனித வள மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்.
நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான திறமையான மனித வளத்தை உருவாக்குவதில் பாடசாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதன் மூலம், அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்வி முறையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒவ்வொரு மாணவரும் சமமான வாய்ப்புகளுடன் கல்வி கற்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 10ஆம் திகதி ஹபரண மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான திறமையான மனித வளத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.






