விமான நிலையத்தில் கைவிடப்பட்ட இரு பயணப் பெட்டிகள்; உள்ளே ரூ.32 கோடி பெறுமதியான குஷ்.!!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பொதிகளில் இருந்து சுமார் ரூ.320 மில்லியன் (32 கோடி ரூபாய்) பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் இன்று (15) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் 06ஆம் இலக்க பயணப்பொதி பெல்ட் அருகே கைவிடப்பட்டிருந்த இரண்டு பயணப் பெட்டிகளிலேயே இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருள் காற்றுப் புகாத வகையில் விசேடமாக பொதியிடப்பட்ட 60 பொதிகளாக இரண்டு பயணப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து நேற்று (14) கொழும்பு வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 405 விமானத்தில் பயணித்த ஒருவரால் இந்தப் பயணப் பொதிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விமான நிலையத்தில் வைத்து தான் கைது செய்யப்படக்கூடும் என அஞ்சிய குறித்த பயணி, தனது இரண்டு பயணப் பொதிகளையும் விமான நிலையத்திற்குள் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபரை அடையாளம் காணும் நோக்கில் விமான நிலையத்தின் CCTV காணொளிகளை ஆய்வு செய்வதுடன், சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனத்தின் உதவியுடனும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருள் பொதிகளை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.